×

டிவிட்டரில் பொதுமக்களிடையே வதந்தி பரப்பியதாக பாஜ மாநில இளைஞர் அணி தலைவர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: தனது டிவிட்டர் பக்கத்தில் மக்களிடையே வதந்திகளை பரப்பியதாக பாஜ மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், பாஜ மாநில இளைஞர் அணி தலைவராக உள்ள வினோஜ் பி.செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ‘200 நாள் ஆட்சியில் 134 கோயில்கள் இடிப்பு’ என பதிவு செய்துள்ளார்.

இது இரு மதங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்த வினோஜ் பி.செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். சைபர் க்ரைம் போலீசார் விசாரணையில் பாஜ மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தன்னுடையே டிவிட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து பாஜ மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, 505,(1),(பி), 502(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக துணை நிற்கும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் டிவிட்டர் பதிவில் எந்தவிதமான கண்ணிய குறைவான வாசகங்களோ, மதக்கலவரம் துண்டும் செய்திகளோ இல்லை. ஒரு கருத்தியலை, கருத்தியலால் எதிர்க்கொள்ளாமல், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காவல்துறைய ஏவிவிட்டு கருத்து சுதந்தித்திற்கு தடை போட நினைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. வினோஜ் பி.செல்வத்துக்கு பாஜ துணை நிற்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : BJP , Twitter, BJP state youth team leader, police case
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...