விபத்து வழக்கில் திடீர் திருப்பம்; ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய அதிகாரி கார் ஏற்றிக் கொலை: சிசிடிவி மூலம் அம்பலம், 2 பேர் கைது, 3 பேருக்கு வலை

செய்துங்கநல்லூர்: பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (56), ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜன.16ம் தேதி வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புளியங்குளம் பறம்பு அருகே வரும்போது பின்னால் வந்த கார், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த செந்தாமரைக்கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் செந்தாமரைக்கண்ணனை பின்தொடர்ந்து சென்ற காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் கார் ஏற்றி, ரயில் நிலைய அதிகாரி செந்தாமரைக்கண்ணன் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர் பாக வல்லநாட்டை சேர்ந்த மந்திரம் மகன் மகேஷ்(33), சொரிமுத்து மகன் சுடலைமணி(29) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: கொலையான செந்தாமரைக்கண்ணனுக்கும், நாசரேத் அருகே கொமந்தா நகரை சேர்ந்த சாம்ராட் பாண்டியன் குடும்பத்தினருக்கும் கடந்த 15 ஆண்டுகளாக இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சாம்ராட் பாண்டியன் தனது நண்பர்களுடன் கடந்த ஜன.4ம் தேதி கோவா சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பும் போது கோவாவில் நடந்த ரயில் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். சாம்ராட் பாண்டியன் மறைவு குறித்து அவரது நண்பர்கள், முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், ‘‘இறைவனின் தண்டனை’ என செந்தாமரைக்கண்ணன் பதிவு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த சாம்ராட் பாண்டியனின் நண்பர்கள், வாகன விபத்து போல் திட்டமிட்டு செந்தாமரைக்கண்ணனை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாகன விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: