×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடுபவர்கள் 90 நாட்களிலேயே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போட்ட 90 நாட்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் நலனுக்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியபின் 9 மாதங்கள் கடந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என்ற வழிக்காட்டு நெறிமுறைகள் உள்ளது. இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களின் நலனுக்காக புதிய வழிக்காட்டு நெறிமுறை வெளியிடப்படுகிறது.

அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் நிறைவு பெற்றப்பின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். மேலும் கோவின் செயலியில் முன்கள பணியாளர்கள் வரிசையில் அவர்கள் சேர்க்கப்படுவதால் தேர்தல் பணியில் ஈடுபடுவோர், தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். ஆதார் எண் அளித்து தடுப்பூசி போட்டு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதை தேர்தல் அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Public Health Director ,Selva Vinayagam , Urban Local Election, Booster Dose Vaccine, Director of Public Health`
× RELATED பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள...