நீட் தேர்வு எழுதி 7.5% உள்ஒதுக்கீட்டு பட்டியலில் இடம்பெற்றும் பியூசி படிப்பால் நிராசையான எம்பிபிஎஸ் சேர்க்கை

* பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுதினார்

* 61 வயதிலும் அசத்திய ஓய்வுபெற்ற ஆசிரியர்

சென்னை: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (61). இவர், விலங்கியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று இண்டூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் வீட்டில் இருந்த சிவபிரகாசம் பிளஸ் 2 படிக்கும் மகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து வந்தார். தொடர்ந்து படிப்பின் மீது ஆர்வம் ஏற்படவே, பெற்றோரின் சிறுவயது ஆசையான டாக்டர் படிக்க வேண்டும் என்பதை மனைவி சுப்புலட்சுமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிவபிரகாசம் நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் 249 மதிப்பெண் பெற்றார். இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 349 தரவரிசை பட்டியலில் இடம் பெற்றார்.

இந்நிலையில், நேற்று தொடங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டின் கீழ் நடந்த மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற சிவபிரகாசம், மருத்துவ படிப்பை மாணவர்களுக்கு விட்டு கொடுப்பதாக கூறி கலந்தாய்வில் பங்கேற்காமல் சென்றார். இதற்கிடையில் 1978ம் ஆண்டில் தமிழகத்தில் பிளஸ் 2 பாடத்திட்டத்திற்கு  பதிலாக, பி.யூ.சி., என்ற படிப்பு வரை மட்டுமே இருந்தது. தற்போது  மருத்துவ படிப்புக்கு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தகுதியாக  இருப்பதால் பி.யூ.சி படிப்பை ஏற்க முடியாது என்று அவரது விண்ணப்பத்தை  மருத்துவ கல்வி இயக்ககம் நிராகரித்துள்ளது. அதற்கு முன்பே கவுன்சலிங்கில்  பங்கேற்காமல் சிவபிரகாசம் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பொது கலந்தாய்வில் பங்கு பெற உள்ள மற்றொரு 63 வயது நபரும் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சிவபிரகாசம் கூறியதாவது: பாப்பாரப்பட்டி, தியாகி  சுப்பிரமணிய சிவா அரசு மேல்நிலை பள்ளியில் படித்தேன். பட்டப்படிப்புகளை முடித்த பின் மின்வாரியத்தின் ஆய்வாளராக பணியாற்றினேன். தொடர்ந்து 13 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். நான் பள்ளியில் படிக்கும் போது என் பெற்றோர், மருத்துவம் படிக்கும்படி கூறினர். அப்போது பியூசி படிப்பில் 554 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். அதனால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது நீட் தேர்வுக்கு பின் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மேலும் போட்டி தேர்வுகளை கண்டு மாணவர்கள் பயப்படக்கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்வு எழுதினேன். ஆனால் போட்டி தேர்வு என்பது அரசு பள்ளி ஆசிரியராகவும், மாணவராகவும் எனக்கு கடினமானதாக தான் இருந்தது. கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் பயிற்சி டாக்டராக இருக்கும் எனது மகன் பிரசாந்த், எனது இடத்தை மற்றொரு அரசு பள்ளி மாணவருக்கு விட்டுக் கொடு என்றார். நான் படித்தால் 66 வயதில் மருத்துவம் முடித்து அடுத்த 15 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்வேன். மாணவர்கள் படித்தால் 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவை செய்ய முடியும். நான் படிக்க வேண்டும் என்றபோது வழிகாட்டியாக இருந்து ஊக்குவித்த என்னுடைய மனைவி சுப்புலட்சுமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இடஒதுக்கீடு கிடைத்தது எப்படி?

மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது: எந்த வயதில் வேண்டுமானாலும் நீட் தேர்வு எழுதலாம் என்று ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. அதன்படி நீட் தேர்வு எழுதி சிவபிரகாசம் தேர்ச்சி பெற்று வந்து விட்டார். நாம் பிளஸ் 2  பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கொடுக்கிறோம். அதற்கான வழிகாட்டுதல்களும் உள்ளது. தேர்வரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நம்முடைய கடமை. விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்ட பிறகு, இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தினோம்.

பின்னர் பிளஸ் 2 படித்தவர்கள் தான் மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்கள். இது மாநில அரசின் கொள்கை. ஓய்வு பெற்ற ஆசிரியர் பி.யூ.சி. படிப்பு தான் முடித்திருக்கிறார். ஆகவே நிராகரித்து இருக்கிறோம். ஆனால் அவர் அதற்கு முன்பே எனக்கு இடம் வேண்டாம். இளம் தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிறேன் என்று கூறி சென்று விட்டார். நீட் தேர்வில் பங்கு பெற எனக்கு தகுதியிருக்கும் போது, கலந்தாய்வில் பங்குபெற எனக்கு தகுதியில்லையா என கேள்வி கேட்க அவருக்கு உரிமையிருக்கிறது. அதனால் தான் நாங்கள் தரவரிசையில் அவருடைய பெயரை இடம்பெற செய்தோம் என்றார்.

Related Stories: