×

பெண் எஸ்பிக்கு தொல்லை ஐஜி மீதான பாலியல் புகாரில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஐஜி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிவந்த பெண் எஸ்பி கடந்த 2018ம் ஆண்டில் புகார் அளித்தார். அதன் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி தொடர்ந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலங்கானாவிற்கு மாற்றியும், அதன் விசாரணை அறிக்கைகளை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் 2019 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.  இதையடுத்து, 2019ல் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், கால அவகாசம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

சிபிசிஐடி சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகார்களை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை தொடங்கியுள்ளது. எனவே, கால அவகாசம் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags : CBCID ,iCourt , Harassment of female SP, sexual harassment of IG, CPCIT investigation
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...