முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததால் அதிமுக பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் எம்பி திடீர் நீக்கம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்தான் வகித்து வந்த வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ராஜ்யசபா எம்பி நவநீதகிருஷ்ணன், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது அரசியல் கட்சியினர் மத்தியில் கவனத்தை பெற்றது.

இந்த திருமண விழாவில் பேசிய நவநீதகிருஷ்ணன் எம்பி, அங்கிருந்த கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட ஒரு சில திமுக எம்பிக்களை பாராட்டி பேசினார்.  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்தும் பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழக அரசியலில் இரண்டு துருவங்களாக  இருந்து வரும் திமுக, அதிமுக கட்சிகளின் வரலாற்றில் அரிய நிகழ்வாக, அதிமுக  எம்.பி நவநீதகிருஷ்ணன், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்திற்கு  சென்று திமுக எம்பிக்களை புகழ்ந்து பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் வரவேற்கும் விதமாக பேசப்பட்டது. ஆனால், திடீரென்று, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்.பி (தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்), இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 அதிமுக தலைமையின் இந்த திடீர் உத்தரவு அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்பியாக இருப்பதால், அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. மாநிலங்களவையில் அதிமுகவுக்கு 5 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மக்களவையில் அவர்களுக்கு ஒரு உறுப்பினர்தான் உள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கினால், அதிமுகவின் பலம் குறைந்து விடும் என்பதால் விட்டு வைத்துள்ளனர். ஆனால் அவர் அதிமுக உறப்பினராக நாடாளுமன்றத்தில் செயல்பட்டாலும் தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: