தஞ்சை தனியார் பள்ளியில் மதமாற்றம் நடந்ததாக கூறும்படி சிலர் நிர்ப்பந்தம்: மைக்கேல்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் பகீர் புகார்

தஞ்சை: தஞ்சை தனியார் பள்ளியில் மதமாற்றம் நடந்ததாக கூறும்படி சிலர் நிர்ப்பந்தம் செய்கின்றனர் என மைக்கேல்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த பிளஸ்2 மாணவி பூச்சி மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி இறந்தார். தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்துக்கு ஒரு தரப்பினர் மதமாற்ற வற்புறுத்தலால் தான் தற்கொலை செய்தார் என்றும், மற்றொரு தரப்பினர் மத மாற்றம் கிடையாது. வேறு பிரச்சனையில் தான் தற்கொலை செய்தார் என்றும் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விடுதி வார்டன் சகாய மேரியை கைது ெசய்யப்பட்டார். இதற்கிடையே மாணவி தற்கொலை விவகாரத்தில் வெளியான புதிய வீடியோவில், தற்கொலைக்கான காரணம் மதமாற்றம் இல்லை என தெரிய வந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், ஊராட்சி தலைவர் தனசெல்வி சார்லஸ் மற்றும் பொதுமக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் நேற்று வந்தனர். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது: எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் அடங்கும். இதுநாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறோம். மத சம்பந்தமாக எங்கள் ஊரில் எந்த பிரச்சனையும் நடந்தது இல்லை. எங்கள் ஊரில் இயங்கும் தூய இருதய பள்ளி 163 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த பள்ளியில் 60 சதவீதத்திற்கு மேல் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் விடுதியிலும் இந்து மாணவிகளே அதிகம் தங்கி படித்து வருகின்றனர். இதுவரை பள்ளியில் மதமாற்றம் நடந்ததே கிடையாது. தற்போது தற்கொலை செய்து கொண்ட மாணவி மரணத்தை வைத்து சில கட்சி, இயக்கத்தினர் ஆதாயம் தேடி வருகின்றனர்.

நாங்கள் இதனை வண்மையாக கண்டிக்கிறோம். மேலும் சில கட்சிகள் பலதரப்பட்ட குழுக்கள் அமைத்து விசாரிப்பதையும் கண்டிக்கிறோம். எங்கள் ஊருக்கு யாரோ சிலர் வந்து மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்தார் என்று கூறவேண்டும் என்கின்றனர். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக உண்மைக்கு புறம்பாக எங்களை பொய் சொல்ல வற்புறுத்துகின்றனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. நாங்கள் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழ்வதை சிலர் சீர்குலைக்க முயல்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட் கிளையில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம், ஐகோர்ட் மதுரை கிளையில் செய்த மனு நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. திருச்சி தூய இருதய அன்னை சபையின் அருட் சகோதரி ரோசரி தரப்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, தங்களையும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி மனு செய்யப்பட்டது. அதில், ‘‘‘‘எங்களது ஆர்சி சபையின் கீழ் தமிழகத்தில் சுமார் 90 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் தலையிடுவதில்லை. சம்பந்தப்பட்ட மாணவிக்கு நாங்கள் இரண்டாம் பெற்றோரைப் போல இருந்தோம். அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது தவறான குற்றம் சாட்டுகின்றனர். மதம் மாற்ற குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படையும் இல்லை’’ என அதில் கூறப்பட்டிருந்தது. அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘வீடியோ எடுத்த முத்துவேல் ஆஜராகி செல்போனை கொடுத்தார். ஆனால், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வாக்குமூலம் தர மறுத்துவிட்டார்.

தடயவியல் ஆய்வுக்கு செல்போன் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 63 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. தடயவியல் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. தற்கொலை செய்த மாணவி, தனது சித்தி கொடுமைப்படுத்துவதாக கடந்த 2020ல் சைல்ட் லைனில் புகார் அளித்துள்ளார். நேர்மையாக, வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது.அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டிற்குள் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் சிலரது செயல்பாடுகள் உள்ளன.

இவர்களது நடவடிக்கை விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளது. முத்துவேலின் ெசல்போனில் 4 வீடியோக்கள் உள்ளன. இதில், 2 வீடியோக்கள் மாணவியின் சித்தி தொடர்பானதாக உள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியுள்ளது. முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வேண்டும்’’ என்றார். மனுதாரர் வக்கீல் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி, ‘‘‘‘வழக்கின் விசாரணையை ஒன்றிய அரசின் கீழான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.

சைபர் தொழில்நுட்பம் தொடர்பான தடயவியல் கூடம் ஐதராபாத்தில் தான் உள்ளது. செல்போனை அங்கு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். விடுதியில் எப்படி பூச்சி மருந்து கிடைத்தது? போலீசில் செல்போனை கொடுத்த பிறகு மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது’’ என்றார். மாலை 4 மணி முதல் 5.15 மணி வரை அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவின் மீது தீர்ப்பளிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சித்தி கொடுமை காரணமா? புதிய தகவலால் பரபரப்பு

மாணவியின் தற்கொலைக்கு சித்தி கொடுமைதான் காரணம் என தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின்னர் முருகானந்தம், சரண்யா என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரண்யாவில் பராமரிப்பில் இருந்த வந்த மாணவியை, சித்தி கொடுமை படுத்தி வந்ததாகவும்,

இதுதொடர்பாக கடந்த 2020 ஜூலை 18ம்தேதி அன்று சைல்டு லைன் அமைப்பில் மாணவி அளித்துள்ள புகாரில், தனக்கு சித்தி கொடுமை நடக்கிறது என்று தெரிவித்துள்ளாராம். இதனால் சைல்டு லைன் அமைப்பினர் 4 முறைக்கு மேல் மாணவியின் சொந்த ஊருக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.  இதில் ஒரு முறை மாணவிக்கும், 3 முறை அவரது சித்தி சரண்யாவுக்கும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: