தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக ஒரு சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 4 மாதத்துக்கும் மேலாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,637க்கும், சவரன் ரூ.37,096க்கும் விற்கப்பட்டது. சவரன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.59 குறைந்து ஒரு கிராம் ரூ.4,578க்கும், சவரனுக்கு ரூ.472 குறைந்து ஒரு சவரன் ரூ.36,624க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி நேற்று மேலும் நீடித்தது. அதாவது, நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று மாலையில் கிராமுக்கு ரூ.41 குறைந்து ஒரு கிராம் ரூ.4,537க்கும், சவரனுக்கு ரூ.328 குறைந்து ஒரு சவரன் ரூ.36,296க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விலை குறைவால் நகை வாங்குவோர் அதிக ஆர்வம் காட்டினர். அதனால் நகைக்கடைகளில் நேற்று விற்பனை  அதிகரித்து காணப்பட்டது.

Related Stories: