சென்னையில் இருந்து விமானங்கள் இயங்க நடவடிக்கை 2022ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் நடைபெறும்: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பேட்டி

சென்னை, ஜன. 29: 2022ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் நிச்சயம் நடைபெறும் என்றும், சென்னையில் இருந்து ஹஜ்க்கு விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் என்றும் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் இருந்து முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று  அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் பங்கேற்றார். தொழுகைக்கு பின்னர் அவர் அளித்த பேட்டி:

தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு தொழுகை தொடங்கியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்  2022 ஜூன் மாதம் இறுதியில் இருந்து ஹஜ் செல்லும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும். அதற்கான ஆயுத்த பணிகளும் நடைபெற்று வருகிறது.

கொரோனோ நோய் தொற்றின் பயம் காரணமாக சில இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்திற்கு முன்பதிவு செய்யாமல் உள்ளனர் அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சியில் நிச்சயம் தமிழகத்திற்கு ஹஜ் ஹவுஸ் கட்டப்படும். அதுவும் குறிப்பாக சென்னையில் கட்டப்படும். அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் நிச்சயம் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: