×

எஸ்சி, எஸ்டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி நேரடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது,’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் கடும் சலசலப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பாக எஸ்சி, எஸ்டி.யினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அப்போதையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் கடந்த 2006ம் ஆண்டு வழங்கிய நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும்.

மேலும், இதில் ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை,’ எனக்கூறி, வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற மறுத்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட விதி 16ன் கீழ் மாநில அரசுகள் தாமாகவே அனைத்து முடிவையும் எடுக்கலாம் என தெரிவித்து, வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜர்நைல் சிங் என்பவர் உட்பட பலரின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், ‘அரசு பணியில் பதவி உயர்வின் போது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக எந்தவித உத்தரவையும் பிறக்க முடியாது. ஏனெனில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக கண்டறிய எங்களால் எந்த அளவுகோலையும் தீர்மானிக்க முடியாது. அரசு பணிகளில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த நபர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த அரசு வேலைகளில் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இருக்கிறதா என்பது குறித்த அளவீட்டு தரவை மாநிலங்கள் தான் சேகரிக்க வேண்டும்.

அவர்களால் தான் அதனை வழங்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த விவகாரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான  பிரதிநிதித்துவம் தொடர்பான தரவுகளை சேகரிப்பதை  மாநிலங்களிடமே நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. முக்கியமாக, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசின் கொள்கைகளில் உள்ள அளவீட்டு தரவுகளின்படி தான் முடிவு செய்யப்படும். அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : SC ,Supreme Court , SC, ST. Division cannot be ordered to grant reservation in promotion: Supreme Court judgment
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...