சட்ட விரேதமாக நுழைய முயன்றபோது அமெரிக்கா எல்லையில் பனியில் இறந்து கிடந்தது குஜராத் குடும்பம்: ஒரு வாரத்துக்கு பின் அடையாளம் தெரிந்தது

புதுடெல்லி: கனடா நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் கடந்த வாரம் சட்ட விரோதமாக நுழைய முயன்றபோது, கடும் பனியால் உறைந்து இறந்து கிடந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேரும், குஜராத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய மானிடோபா மாகாணத்தில் உள்ள எமர்சன் நகரில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள அமெரிக்காவின் எல்லையில் கடந்த 19ம் தேதி 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உறைந்து இறந்து கிடந்தனர். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றபோது கடும் பனியில் சிக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தை சேர்ந்த இவர்கள், ஜெகதீஷ் பல்தேவ்பாய் படேல் (39), வைசாலிபென் படேல் (37), விகாங்கி (11) மற்றும் தர்மிக் (3) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 12ம் தேதி டோரந்தோ வந்துள்ளனர். அங்கிருந்து எமர்சென் செல்வதற்காக 18ம் தேதி சென்றுள்ளனர். இவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சடலங்களை இந்தியாவுக்கு அனுப்ப. டொரான்டோவில் உள்ள இந்திய துணை தூதரகம் உதவிகள் செய்து வருகிறது.

7 இந்தியர்கள் விடுவிப்பு

பல்வேறு நாட்டினரை சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு எல்லை வழியாக அழைத்தது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஷாந்த் என்பவரை கடந்த 19ம் தேதி அமெரிக்கா போலீசார் கைது செய்தனர். அவருடன் வேனில் இருந்த 2 இந்தியர்களும், அமெரிக்க எல்லையில் ஊடுருவ முயன்ற 5 இந்தியர்களும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த 7 பேரையும் அமெரிக்க எல்லை கண்காணிப்பு போலீசார் நேற்று விடுவித்தனர். இவர்கள் அமெரிக்க எல்லைக்கு வெளியே விடப்பட உள்ளனர்.

Related Stories: