28 நாள் ரீசார்ஜ் திட்டத்தை 30 நாளாக மாற்ற வேண்டும்: செல்போன் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என டிராய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது 28 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய அளவிலேயே உள்ளன. இதன் காரணமாக மாதாந்திர அடிப்படையில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஓராண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் நலன் கருதி அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் 30 நாட்கள் செல்லுபடியாகக் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, டிராய் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு பிளான் வவுச்சர், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு காம்போ வவுச்சரையாவது முப்பது நாட்கள் செல்லுபடியாகக் கூடிய வகையில் கொண்டிருக்க வேண்டும்’ என்று கூறி உள்ளது. இந்த உத்தரவுக்கு 60 நாட்களில் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் இணங்க வேண்டும்.

Related Stories: