‘தேசம் தான் முதலில்...’இளைஞர்களின் தேசப்பற்றை யாராலும் தடுக்க முடியாது: என்சிசி அணிவகுப்பில் மோடி பெருமிதம்

புதுடெல்லி:  தேசிய மாணவர் படையின் (என்சிசி) அணிவகுப்பு டெல்லியில் உள்ள ஜெனரல் கரியப்பா மைதானத்தில் நேற்று நடந்தது. அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு பேசியதாவது: இந்தியாவில்  புதிய தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) முதல் விளையாட்டு துறை உள்பட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது. எனக்கு  ‘முதலில் தேசம்’தான் என தேச பற்றுடன் பணியாற்றும் இளைஞர்களை யாராலும் தடுக்க முடியாது.  என்சிசி அமைப்பை பலப்படுத்தும் முயற்சியாக  உயர்மட்ட ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

கல்வி வளாகங்களில் போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த கொடிய பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க என்சிசி மாணவர்கள் கடுமையாக பாடுபட  வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக  உள்ள இந்த காலத்தில், தவறான  தகவல்களை பரப்பும் அபாய சூழ்நிலையும்  நிலவுகிறது. இது குறித்து என்சிசி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

எல்லை பகுதிகளில் 2 லட்சம் பேர்

மோடி மேலும் பேசுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் எல்லைப்புற பகுதிகளில் புதிதாக 2 லட்சம் மாணவர்கள் என்சிசி.யில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவிகளும் அதிகளவில் சேர வேண்டும்,’’ என்றார்.

இந்திய இசையை பரப்ப வேண்டும்

மறைந்த இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் நினைவாக நேற்று தொடங்கப்பட்ட கலாசார அறக்கட்டளை துவக்க விழாவில் காணொலியில் பேசிய பிரதமர் மோடி, ‘உலக மயமாக்கலை பயன்படுத்தி இந்திய இசையை  உலகளவில் கொண்டு செல்ல  வேண்டும். இந்த துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவது குறித்து ஜஸ்ராஜ் அறக்கட்டளை கவனம் செலுத்த வேண்டும்,’ என்றார்.

Related Stories: