மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் இருந்து ஓராண்டு நீக்கம்; 12 பாஜ எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகரிடம் முறைகேடாக நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 12 பாஜ எம்.எல்.ஏ.க்கள் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் 2 நாள் மழைக்கால கூட்டத்தொடர் கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி தொடங்கியது. இதில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்ட ஆய்வறிக்கையை தயாரிக்க வசதியாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிராக பாஜ எம்எல்ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  

அப்போது அவைக்கு, தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் தலைமை தாங்கினார். தீர்மானத்தை அவர் குரல் வாக்கெடுப்புக்கு விட்டபோது, கிரிஷ் மகாஜன் மற்றும் சஞ்சய் குதே ஆகிய 2 உறுப்பினர்களும் சபாநாயகரின் மேடையில் ஏறி பாஸ்கர் ஜாதவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 12 பாஜ எம்எல்ஏ.க்களை ஓராண்டுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து இந்த 12 எம்எல்ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

கடந்த 18ம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது, ‘எம்எல்ஏக்களை குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் வரையறை இல்லாமல் சஸ்பெண்ட் செய்வது, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ‘12 எம்.எல்.ஏ.க்களையும் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், கூட்டத் தொடரையும் தாண்டி ஓர் ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது தான் தோன்றித்தனமான தீர்மானமாகும். அரசியல் சட்டத்திற்கும் முரணானது. ஓர் ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்திருப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே, 12 எம்.எல்.ஏக்களையும் ஓர் ஆண்டுக்கு சட்டபேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கிறோம்,’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories: