ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க..! வாக்காளர்களுக்கு ‘நான் ஸ்டிக் தவா’ வீடுவீடாக அதிமுகவினர் விநியோகம்

காரைக்குடி: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பையடுத்து காரைக்குடியில் வாக்காளர்களை கவர அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை துவக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. திமுக அரசு அமைந்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை போன்றே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக பெரும் வெற்றி அடையும் என்ற பயம் அதிமுகவினரிடையே உள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அதிமுகவினர் பொங்கல் பரிசு என்ற பெயரில் வாக்காளர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள நான் ஸ்டிக் தவா வழங்க துவங்கி உள்ளனர். பெரும்பாலான வாக்காளர்கள் இதனை வாங்க மறுத்து விட்டனர். இதனால் அதிமுகவினரிடையே தேர்தலை நினைத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி தேர்தல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: