சென்னையில் சோகம் காதலனுடன் மகள் ஓட்டம் அதிர்ச்சியில் தந்தை தற்கொலை: தாய் கதறல்

பெரம்பூர்: காதலனுடன் மகள் ஓட்டம் பிடித்ததால் அதிர்ச்சியில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் கதறி அழுதார். சென்னையில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜமங்கலம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்தி (47). இவரது மகள் சுமதி (17, பெயர்கள் மாற்றம்). சக்தியும் அவரது மனைவியும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். சுமதி, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார் சுமதி. அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் சுமதியை தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனே ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். கொளத்தூர் கண்ணகி நகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்த குமார் (26) என்பவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து வழக்கை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் மாற்றினர். அவர்கள், வழக்குபதிவு செய்து சுமதி மற்றும் குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் சக்தி, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது அவரது தூக்கத்தில் இருந்து எழுந்த மனைவி, கணவன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: