61 வயதில் நீட் தேர்வில் வென்று கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்: எம்.பி.பி.எஸ் சீட்டை விட்டுக்கொடுப்பதாக அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முடிந்துள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதற்கு 2,135 பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் முதல் நாளான இன்று 719 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 534 இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதில் 437 இடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கும், 97 இடங்கள் பல் மருத்துவ படிப்புக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 324 எம்.பி.பி.எஸ் இடங்களும் அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 13 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் 113 எம்.பி.பி.எஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 84 இடங்கள் என மொத்தம் 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கல்வி கற்பதற்கு வயது ஒன்றும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சிவபிரகாசம். அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249ஆவது இடம் பிடித்துள்ளார். இதனிடையே மருத்துவ படிப்பு இடத்தை விட்டுக்கொடுப்பதாக ஓய்வு பெற்ற ஆசிரியர் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் சேவையாற்ற முடியாது என்பதால் எம்.பி.பி.எஸ் சீட்டை விட்டுக்கொடுத்ததாகவும் ஆசிரியர் சிவபிரகாசம் கூறினார்.

Related Stories: