கட்டிட தொழிலாளி கொலை தொடர்பாக 4 வடமாநில வாலிபர்கள் கைது

வேளச்சேரி: பெரும்பாக்கத்தில் ஒரு கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான 4 வடமாநில வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி அருகே பெரும்பாக்கம், காந்தி நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்றது. இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்தனர். அப்போது அவர்களுக்குள் பணம் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட வாய்த்தகராறில், யூனிஸ் (22) என்ற வாலிபரை சிவம் நாயக் (21), பிஜய் நாயக் (22), சஞ்சய் பாலா (19), ஜெயராஜ் முண்டா (25) ஆகிய 4 பேரும் சரமாரியாக தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து, தலைமறைவான 4 வடமாநில வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த 4 பேரும், கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் மீண்டும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், தாம்பரம் மாநகர ஆணையர் ரவி உத்தரவின்பேரில், பெரும்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மகுடேஸ்வரி, எஸ்ஐ திருநாவுக்கரசு, காவலர் ஷேக் மஸ்தான் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன் அசாம் மாநிலத்துக்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த சிவம் நாயக், விஜய் நாயக், சஞ்சய் பாலா, ஜெயராஜ் முண்டா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னைக்கு கொண்டு வந்து, நேற்று நீதிமன்ற உத்தரவின்படி 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Related Stories: