×

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வு வழக்கு இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தால் நிர்ணயம் செய்ய முடியாது: வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், மேற்கண்ட சமூகத்தினருக்கான பதவி உயர்வு நிபந்தனையை தளர்த்த முடியாது எனக்கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
ஒன்றிய அரசின் கீழுள்ள சுமார் 90 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் 30  லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார்  3,800 பதவிகள் (கேடர்கள்) உள்ளன. ஒவ்வொரு கேடர் கட்டுப்பாட்டு அதிகாரியும்,  அந்தந்த கேடருக்கான இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் பதவிஉயர்வு  பெறுகின்றனர். ஆனால் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு முறையில் போதுமான பிரதிநிதித்துவத்தின் அளவை நிர்ணயம் செய்யக் கோரியும், நிபந்தனைகளை தளர்த்தக் கோரியும், ஜர்னைல் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல்திறன்கள் பாதிக்காது. ஏனென்றால் செயல் திறனுக்கான அளவுகோலை நிறைவேற்றும் மற்றும் தகுதியானவர் என அறிவிக்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும். பதவி உயர்வை உறுதிப்படுத்தும் போது, வருடாந்திர செயல் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. பதவி உயர்வு தொடர்பான விஷயங்களை பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட துறையின் பதவி உயர்வுக் குழுவானது, பதவி உயர்வுக்கான அதிகாரிகளின் தகுதியை தீர்மானிக்க வேண்டும். இதனால் தகுதியற்றவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தது.

இந்நிலையில் இன்று வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு பிரதிநிதித்துவத்திற்கான அளவை உச்சநீதிமன்றத்தால் நிர்ணயம் செய்ய முடியாது. கடந்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மாநில அரசுகள் தரவுகளை சேகரிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் போதுமானதாக உள்ளதா? என்பதை மாநில அரசுகளே சேகரிக்க வேண்டும். அவ்வாறு அளவிடக்கூடிய தரவுகளை சேகரிப்பதற்கான அலகாக ‘கேடர்’ முறையை பின்பற்ற வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்ட விஷயம் என்பதால், இதுதொடர்பாக எவ்வித உத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது’ எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court , SC, ST category, promotion, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...