பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவருக்கு அடைக்கலம்; அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் கார் டிரைவரான ரவுடி தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்ததாக அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால். பிரபல தாதாவான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து,  ஆள்கடத்தல் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் உள்ளது. போலீசாருக்கு பயந்து தாதா ஸ்ரீதர் தனபால் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.

பின்னர் கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீதர் தனபால் தற்கொலை செய்து கொண்டார். தர் தனபாலுக்கு வலது கரமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான தினேஷ், தனிகா, பொய்யாகுளம் தியாகு ஆகியோர் செயல்பட்டு வந்தனர். தாதா ஸ்ரீதர் தனபால் தற்கொலைக்கு பிறகு அந்த இடத்திற்கு வர மூன்று ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவராக ரவுடி தினேஷ் இருந்து வந்தார். ரவுடி தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து பிரபல ரவுடி படப்பை குணா 2 நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலன் வலதுகரமாக செயல்பட்டு வந்த பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிரபல ரவுடி தினேஷின் கூட்டாளியாக வடபழனியை சேர்ந்த குமார் இருந்து வருகிறார்.

குமார் தற்போது வடபழனி பகுதியில் அதிமுக வட்ட செயலாளராக உள்ளார். தனது கூட்டாளியான தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக தனிப்படை போலீசார் அதிமுக வட்ட செயலாளராக உள்ள குமாரை ேநற்று இரவு கைது செய்தனர். அதேபோல், துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த ரவுடி பரணி என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: