குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரம் சுத்தியால் அடித்து கணவனை கொலை செய்த மனைவி: ஓட்டேரியில் பயங்கரம்

பெரம்பூர்: குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற ஆத்திரத்தில் சுத்தியால் அடித்து கணவனை மனைவி கொலை செய்தார். ஓட்டேரியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை ஓட்டேரி புதிய வாழை மா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). மனைவி பிரீத்தா (41). இவர்களது மகள், பிஏ 3ம் ஆண்டும், மகன் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். முதல் தளத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மற்ற 3 தளங்களை வாடகைக்கு விட்டுள்ளனர். அதிலிருந்து வரும் வாடகையை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். பிரதீப், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு மனைவி, பிள்ளைகளை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அவரது பெற்றோர், தங்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தனியாக வசிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் பிரதீப். அவரிடம், ‘எதற்காக இப்படி அடிக்கடி குடித்து விட்டு வருகிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு குடும்பத்துடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நள்ளிரவில் திடீரென எழுந்த பிரதீப், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அவர் சத்தம் போட்டபடி, படுக்கையில் இருந்து எழுந்து மின்விளக்கை போட்டார். உடனே பிரீத்தாவும், சத்தம் கேட்டு எழுந்தார். மகளிடம் தவறாக நடக்க முயன்றதை அறிந்து, கணவரை கடுமையாக எச்சரித்து வெளியே போகும்படி பிரீத்தா கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரதீப், ப்ரீத்தாவை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் நாற்காலியை தூக்கி வீசினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். அந்த நேரத்தில் சத்தம் கேட்டு எழுந்த மகனையும் பிரதீப் பலமாக தாக்கி கீழே தள்ளினார்.

அதற்கு பிறகும் மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிரீத்தா, அங்கு கிடந்த சுத்தியலை எடுத்து பிரதீப்பின் தலையில் ஓங்கி அடித்தார். ரத்தம் சொட்ட சொட்ட நிலை தடுமாறி கீழே சாய்ந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனால் பிரீத்தா, மகன், மகள் ஆகியோர் செய்வதறியாது திகைத்து கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பிரதீப், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து பிரீத்தாவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், வழக்கமாக பக்கத்து தெருவில் உள்ள தாத்தா- பாட்டியுடன் அவரது மகள் தூங்குவாள். தாத்தா, பாட்டி ஊருக்கு சென்றிருந்ததால் பிரீத்தியுடன் தூங்கியுள்ளார். குடிபோதையில் வந்த பிரதீப், மகள் என்றும் பாராமல் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் சுத்தியலால் அடித்துள்ளார்’ என்பது தெரியவந்தது. மகளின் மானத்தை காப்பாற்ற தற்காப்புக்காக அடித்ததில் அவர் இறந்ததால் கொலை வழக்கு பதிவு செய்தாலும் பிரீத்தாவை போலீசார் விடுவித்தனர்.

Related Stories: