சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் தந்தைக்காக மழலை மொழியில் வாக்கு சேகரித்த 7 வயது மகள்.! அயோத்தியில் மக்கள் ஆச்சர்யம்

அயோத்தி: அயோத்தி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் மகள், தனது தந்தையுடன் மழலை மொழியில் பிரசாரம் செய்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பவன் பாண்டே போட்டியிடுகிறார். இவரது மகளான காயத்ரி பாண்டே (7), தினந்தோறும் காலை 6 மணி முதல் தனது தந்தையுடன் வீடு வீடாக சென்று, ‘எனது தந்தைக்கு வாக்களியுங்கள்; அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்று மழலை மொழியில் வாக்கு சேகரிக்கிறார். இதனை பார்த்து வாக்காளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பவன் பாண்டே கூறுகையில், ‘கொரோனா பரவல் அச்சத்தால் என் மகளை வீட்டிலேயே இருக்கும்படி, நானும் எனது மனைவியும் கூறினோம். ஆனால், அவர் எனக்கு முன்பே எழுந்து என்னுடன் பிரசாரம் செய்து வருகிறார்’ என்றார். முன்னதாக லக்னோ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த பவன் பாண்டே, சமாஜ்வாதி கட்சியின் சார்பில் 2012ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை வீழ்த்தி அமைச்சரானார்.  ஆனால், 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் வேத் பிரகாஷ் குப்தாவிடம் தோற்றார். அயோத்தி தொகுதிக்கான தனது வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: