இன்று வேட்பு மனு தாக்கல் துவக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சி தேர்தல்

* 348 வாக்குச்சாவடிகள், 2.93 லட்சம் வாக்காளர்கள்

* அனைத்து ஏற்பாடுகளும் தயார் ஆட்சியர் மோகன் தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் 210 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் தயார்நிலையில் இருப்பதாகவும், இதற்காக 348 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 2.93 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளதாக ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.விழுப்புரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் மோகன், எஸ்பி நாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஆட்சியர் மோகன் நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விழுப்புரம், கோட்டக்குப்பம் நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், அரகண்டநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 210 கவுன்சிலர்களை தேர்வுசெய்ய உள்ளோம். இதற்காக 348 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் 2,93,000 வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய உள்ளனர்.

முதல் கட்டமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், மாநிலத்தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதனை ஆய்வு செய்துவருகிறோம். இதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல்விதிகள் அமலில்வந்துவிட்ட நிலையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்விதிமீறல்கள் இருக்கிறதா? என்பதனை காவல்துறை, வருவாய்துறை மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தனித்தனியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு இந்த சோதனைகள் நடைபெறும்.

அதேபோல், அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தனித்தனியே அந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கஉள்ளது. வேட்புமனுதாக்கலின்போது 3 பேர்மட்டுேம அனுமதிக்கப்படுவார்கள். 348 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல்முறையில் ஒதுக்கீடு செய்து தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விதிமீறலில் எந்தகட்சியினர் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, அதிகாரிகள் உடனிருந்தனர்.

பரிசுப்பொருட்கள் விநியோகம் ஆட்சியர் எச்சரிக்கை

ஆட்சியர் மோகன் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பரிசுப்பொருட்கள், பணம் விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் இதுபோன்ற புகார்கள் பெரும்பாலும் வரவில்லை. தற்போது, நகர்ப்புறத்தேர்தல் என்பது சிறிய அளவில் நடக்கிறது. மொத்தமே 348 வாக்குச்சாவடிகள் என்பதால், எளிதாக கண்காணிக்கப்படும். பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்றார்.

15% வாக்குச்சாவடிகள் பதற்றம்

எஸ்பி நாதா கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 348 வாக்குச்சாவடிகளில் 15 சதவீதம் பதற்றமான, மிகபதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த பட்டியல்கள் இறுதி செய்யப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி கேமிராக்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.

Related Stories: