ஐபிஎல் வீரர்கள் பொது ஏலம்; சிஎஸ்கே நிர்வாகிகளுடன் கேப்டன் தோனி ஆலோசனை.! யார், யாரை ஏலம் எடுப்பது குறித்து திட்டம் வகுப்பு

சென்னை: 15வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் இணைந்துள்ளதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்களை தக்க வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் புதிதாக இணைந்துள்ள 3 அணிகளும் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை ரூ.16 கோடி, கேப்டன் டோனியை 12, மொயின் அலியை 8, ருதுராஜ் கெய்க்வாட்டை ரூ.6 கோடிக்கு தக்க வைத்துள்ளது.

ஒவ்வொரு அணிகளும் ரூ.90 கோடிக்கு வீரர்களை ஏலம் எடுக்கலாம். அதன்படி சிஎஸ்கே 4 வீரர்களுக்கும் 42 கோடியை செலவிட்டுள்ளது. மீதமுள்ள 48 கோடியில் பொது ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுக்கலாம். பொது ஏலத்திற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் திட்டம் வகுத்து தயாராகி வருகின்றன. சிஎஸ்கே அணியும் அதற்கு தயாராகி வருகிறது. பொது ஏலத்தில் எப்படிப்பட்ட வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது பற்றி ஆலோசிப்பதற்காக டோனி நேற்று இரவு சென்னை வந்தார். இன்று அவர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய பெரும்பாலான வீரர்களை ஏலம் எடுக்க முடிந்த வரை முயற்சி செய்ய திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. டூபிளசிஸ், பிராவோ, லுங்கி நிகடி, அம்பத்தி ராயுடு, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோரை குறிவைத்துள்ளனர். அதற்கு, ஏலத்தில் எப்படி கையாள்வது, ஏ, பி, சி என்று 3 பிளான்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

பொது ஏலத்திலும் டோனி நேரடியாக பங்கேற்பார் என தெரிகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் டோனிக்கு இது கடைசி தொடராக இருக்கலாம். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற போது எனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் போட்டி நடப்பதால் டோனியின் ஆசை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் டோனி எங்கள் கேப்டன். அவர் சிஎஸ்கேவின் முதல் வீரர், அவர் பதவி விலக முடிவு செய்யும் போது, ​​புதிய கேப்டன் பற்றி முடிவு செய்யப்படும். நாங்கள் இப்போது ஏலத்தில் கவனம் செலுத்தி வருகிறோம் என சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்

மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் கடைசி வரை நடைபெற உள்ளது. இதனிடையே இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் பொது ஏலத்தில் பேர்ஸ்டோவ், ஒல்லி போப், மார்க் வுட், டேவிட் மலான், கிரேக் ஓவர்டன், சாம் பில்லிங்ஸ், டான் லாரன்ஸ் என இங்கிலாந்து வீரர்கள் 22 பேர் இடம்பெற்றுள்ளனர். ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணிக்காக ரூ.11 கோடியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து ஜூனில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஜூன் 2ம் தேதி லார்ட்சில் தொடங்குகிறது. ஐபிஎல்லில் கடைசி போட்டி வரை ஆடினால் அந்த வீரர்கள் முதல் டெஸ்ட்டில் ஆடுவது கேள்விக்குறியாகும். இதனால் சில வாரங்களுக்கு முன் இந்த தொடருக்கு தயாராக இங்கிலாந்து தனது வீரர்களை திரும்ப அழைக்கும் என தெரிகிறது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: