நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாஜ-அதிமுக கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும்; பாலகிருஷ்ணன் பேட்டி

தென்காசி: தென்காசியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்ற உத்தரவு காரணமாக நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் தொற்று பரவாத அளவிற்கு பாதுகாப்பாக தேர்தலை நடத்த வேண்டும். அதே சமயத்தில் வேட்பாளர்கள் பொது மக்களை சந்திப்பதற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த முறை நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று இந்தத் தேர்தலிலும் பாஜ-அதிமுக கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பாஜ மதக்கலவரத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

மாணவி தற்கொலை சம்பவம் துயரமான ஒன்று தான். தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மிஷினரி நடத்தும் பள்ளிகளில் ஏராளமான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகள் இல்லை என்றால் பாதிப்பு மக்களுக்குத்தான். தமிழகத்தை திட்டமிட்டு மதவெறி உள்ள மாநிலமாக மாற்ற முயற்சிக்கின்றனர். தஞ்சைக்கு எனது தலைமையில் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அதுகுறித்து அறிக்கை கொடுப்போம். மத்திய நெடுஞ்சாலை துறை சாலைகள் அமைக்கும் போது விவசாயிகள் உள்பட யாரையும் கலந்தாலோசிப்பது இல்லை. ராஜபாளையம்-செங்கோட்டை சாலையில் மட்டும் 1600 ஏக்கர் விளைநிலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது.

நீர்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்பு விஷயத்தில் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரித்து அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பு கூறவேண்டும். ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும் என்று கூறுவது சரியாக வராது. நீர்ப்பிடிப்பு உள்ள பகுதியாக இருந்தால் அகற்றலாம், எப்போதோ ஒரு காலத்தில் நீர்ப்பிடிப்பு உள்ள பகுதி என்று கூறி இப்போது அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை எல்லாம் இடிக்க கூறுவது சரியாக இருக்காது. மதுரை உயர் நீதிமன்றமும் பல இடங்களில் கலெக்டர் அலுவலகமும் கூட நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. இதற்காக திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இயக்கங்கள் நீதிமன்றத்தில் போராடி பெற்றிருக்கிறோம். இவ்வளவு நாள் இந்த ஒதுக்கீடு கிடைக்காததற்கு பாஜ தான் காரணம் என்றார்.

Related Stories: