×

தேவைகள் அதிகரிப்பு... விளைச்சலோ குறைவு பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படுமா?

*தமிழக அரசுக்கு தேனி விவசாயிகள் வலியுறுத்தல்

*ஆலைகள் நசிவால் 1 லட்சம் பேர் வேலையிழப்பு

தேனி : தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ள நிலையில் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ராஜபாளையம் உள்ளிட்ட  பகுதிகளில் பருத்தி சாகுபடியும், அதனைச் சார்ந்த ஆலைகளும் உள்ளன. நாட்டின் மொத்த பருத்தி நூல் ஆலைகளில் 50 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன் தேனி பகுதியில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ஹெக்டேர் வரை பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேல் (ஒரு பேல் = 180 கிலோ) எடையுள்ள பருத்தி பஞ்சு உற்பத்தியாகியது. இதனால், தேனி அல்லிநகரம் நகரை ஒட்டியிருந்த முக்கூட்டு சாலையில் (தற்போதைய தேனி) பருத்திச் சந்தை உருவாக்கப்பட்டது. தேனியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விளையும் பருத்தியை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து சந்தைப்படுத்தினர். இதனால் மெல்ல, மெல்ல தேனி நகரம் வளரத்தொடங்கியது.

ஒரு லட்சம் பேருக்கு வேலை: பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் தேனியில் கடந்த 1910ம் ஆண்டு துவக்கத்தில் ஜின்னிங் பாக்டரி தொடங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக ஸ்பின்னிங், வீவிங் மில்கள் வந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் வரை தேனி பகுதியில் சுமார் 40 ஜின்னிங் பாக்டரிகள், பருத்தி விதையில் எண்ணெய் எடுக்கும் 16 மில்கள், நூல்நூற்கும் ஸ்பின்னிங் மில்கள் 25, துணி வீவிங் மில்கள் 25 என 100க்கும் மேற்பட்ட மில்கள் இயங்கி வந்தன. ஒரு ஜின்னிங் பேக்டரியில் 500 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பணிபுரிந்தனர். ஸ்பின்னிங் மற்றும் வீவிங் மில்களில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை பணிபுரிந்து வந்தனர். இதன்படி, மில்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வேலை பார்த்து வந்தனர். இதுதவிர, தேனியில் பருத்தியை விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் கமிஷன் கடைகள் 500 வரை இருந்தன. இந்த தொழில் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு மொத்தம் 1.25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

பருத்தியை அழித்த கரும்பு: தேனி மாவட்டத்தில் சர்க்கரை ஆலை வந்த பிறகு, விவசாயிகள் கரும்பு விவசாயத்திற்கு மாறினர். இதேபோல, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை, வாழைக்கு விவசாயிகள் மாறினர். இதனால், மாவட்டத்தில் பருத்தி விளைச்சல் கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்கியது. மேலும், முளைப்பு திறன் குறைந்த பருத்தி விதைகள் சந்தையில் புகுந்ததால், ஏக்கருக்கு 6 குவிண்டால் பருத்தி பஞ்சு கிடைத்த நிலையில், ஏக்கருக்கு 2 குவிண்டால் பருத்தி பஞ்சு மட்டுமே கிடைத்தது. இதனால், தேனி மாவட்டத்தில் தற்போது சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டும் பருத்தி விவசாயம் நடக்கிறது.

பஞ்சாய் பறந்தது... பருத்தி சாகுபடி குறைந்ததால், மாவட்டத்தில் அதைச் சார்ந்த தொழில்கள் முடங்கின. தற்போது பத்துக்கும் குறைவான ஜின்னிங், ஸ்பின்னிங், வீவிங் மில்களே உள்ளன. பருத்தி வாங்கி விற்ற கமிஷன் கடைகளும் தற்போது 50 ஆக குறைந்துள்ளன. தினசரி 1.25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து வந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் கொள்முதல்: இந்தியாவின் மொத்த பருத்தி பஞ்சு தேவை 3.50 கோடி பேல் (630 லட்சம் கிலோ). இதில், தமிழ்நாட்டிற்கு மட்டும் 1.50 கோடி பேல் தேவைப்படுகிறது. இதனால், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். எனவே, தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.எஸ்.கே.நடேசனிடம் கேட்டபோது, ‘‘தேனி மாவட்டத்தில் பருத்தி சாகுபடி மற்றும் சார்ந்த தொழில்கள் மூலம், 1.25 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இது படிப்படியாக குறைந்து தற்போது 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்தியாவில் பருத்தி சார்ந்த மில்களில் 50 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது. தேனி மாவட்டத்தில் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் மண் வளம், நல்ல சீதோஷ்ண நிலை உள்ளது.

பருத்தி தொழில் நன்றாக இருந்தபோது, தேனியில் எம்யுசி-5 என்ற ரக பருத்தி இருந்தது. இந்த ரகம் காலப்போக்கில் காணாமல் போனது. தற்போது நீண்ட இலை ரகமான டிசிஎச் ரக பருத்தி நடைமுறையில் உள்ளது. இந்த ரகம் எகிப்து, அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ரக பருத்தி விதைகளை, வேளாண்மைத்துறை குறைந்த விலையில் வழங்க முன்வர வேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்தை போல, பருத்தி விளைச்சலை அதிகரிக்க, தமிழகத்தில் பருத்தி விவசாய மேம்பாட்டு வாரியம் என தனி வாரியத்தை உருவாக்க வேண்டும். இதன்மூலம், தேனி மாவட்டத்தில் மீண்டும் பருத்தி விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்’’ என்றார்.

Tags : Theni: Cotton cultivation has declined in Tamil Nadu as demand has increased. Government to take action to increase cotton cultivation
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்