காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டல்

நீடாமங்கலம் : காவிரி டெல்டா மாவட்டங்களில் உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்த தகவலின்படி காவிரி டெல்டா விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற பயறு வகைப் பயிர்களை மார்கழி பட்டத்தில் விதைத்துள்ளனர். இதில் வம்பன் 8 மற்றும் ஆடுதுறை 5 என்ற உளுந்து ரகங்களும், கோ 8 என்ற பச்சை பயறு ரகங்களையும் விவசாயிகள் ஆங்காங்கே விதைத்துள்ளனர். தற்போது பயறுவகை பயிர்கள் 30-35 நாட்கள் அதாவது பூ பூப்பதற்கு முந்தைய பருவத்தை அடைந்திருக்கும்.

இதற்கு இலை வழியாக 2 சத டி.ஏ.பி கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி-ஐ பூ பூக்கும் தருணத்திலும் அதில் இருந்து 15 நாட்கள் கழித்து 2வது0 தெளிப்பு கொடுக்க வேண்டும் (அல்லது) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயறு ஒண்டர் (பயறு அதிசயம்) ஒரு ஏக்கருக்கு 2 கிலோ-ஐ பூ பூக்கும் தருணத்திலும் அதில் இருந்து 15 நாட்கள் கழித்து 2வது தெளிப்பு கொடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் உடன் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து பயன்படுத்த வேண்டும். பயறுவகைப் பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் 2 சத பொட்டாசியம் குளோரைடு அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாசியம் குளோரைடு உபயோகிக்கலாம்.

பயறு ஒண்டர் உபயோகிக்கும்போது பூக்கள் உதிர்வது குறைந்து பயிரின் விளைச்சல் 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் வறட்சியைத் தாங்கும் தன்மையும் அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரனை 93602 47160 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: