பீரோவில் வைத்துள்ள நகைக்கு வட்டி தருவதாக கூறி மோசடி: சேலத்தில் 4 கிலோ தங்கம், ரூ.4 கோடியுடன் தம்பதி தலைமறைவு

சேலம்: சேலம் மாநகர் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் லலிதா தம்பதியினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர் வீதியில் லலிதா சில்வர் ஜுவல்லரி என்ற பெயரில் சிறிய அளவிலான நகைக்கடையை திறந்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் ரூ.3,000 வட்டி தருவதாகவும், அதேபோல தங்க நகைகளை டெபாசிட் செய்தால் சவரனுக்கு 600 ரூபாய் வீதம் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் பணம் மற்றும் நகைகளை வசூலித்துள்ளனர்.

ஓராண்டிற்கு மேலாக வட்டியை கொடுத்து வந்த நகைக்கடை உரிமையாளர் தங்கராஜ் கடந்த சில மாதங்களாக முறையாக பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணம் மற்றும் நகைகளை டெபாசிட் செய்தவர்கள் கடை உரிமையாளர் தங்கராஜ் மற்றும் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களிடம் பணத்தை கேட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த நகை, பணம், பொருட்களை தனது காரில் எடுத்துக்கொண்டு தங்கராஜ் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தம்பதி தப்பி தலைமறைவான தகவல் அறிந்த முதலீட்டாளர்கள் சக்தி நகரில் வசிக்கும் தங்கராஜின் மாமனார் தேவராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை முதலீடாக பெற்று சுருட்டிக்கொண்டு தம்பதியினர் தலைமறைவான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: