தேங்கிய மழைநீரால் வீணாகிய சோளப்பயிர்கள்-நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

கமுதி :  கமுதி அருகே கோவிலாங்குளம்பட்டி பகுதியில் அதிக மழையால், தண்ணீர் தேங்கி சோளப் பயிர்கள் வீணாகின. கமுதி அருகே கோவிலாங்குளம்பட்டி, ஆரைகுடி, கோவிலாங்குளம், கொம்பூதி, நெருஞ்சுப்பட்டி, வில்லனேந்தல், சாத்தூர்நாயக்கன்பட்டி, எருமைகுளம், பறையங்குளம், காத்தனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சோளப் பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்நிலையில் தற்போது பெய்த பருவமழையில் அதிகமான மழை காரணமாக சோளப்பயிர்கள் உள்ள இடத்தில் மழைநீர் தேங்கி பயிர்கள் வளராமல் முற்றிலும் வீணாகியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

கோவிலாங்குளம்பட்டி விவசாயிகள் சந்திரன், தர்மராஜ் கூறும்போது, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சோளப்பயிர் விவசாயம் செய்து உள்ளோம். இதில் ஏக்கர் ஒன்றுக்கு விதை, உரம், வேலையாட்களுக்கு சம்பளம் என ரூ.5 ஆயிரம் செலவு செய்துள்ளோம். அதிகமான மழை காரணமாக தண்ணீர் தேங்கி, பயிர்கள் அனைத்தும் முற்றிலும் வீணாகி மிகவும் நஷ்டமடைந்துள்ளோம். மேலும் கடன் வாங்கி ஏராளமான விவசாயிகள்,விவசாயம் செய்துள்ளனர். அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories: