குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரில் துள்ளி குதித்த மீன்களை ஆர்வமுடன் பிடித்த மக்கள்

ஆரணி : ஆரணியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரில் துள்ளி குதித்த மீன்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழையால் நீர் நிலைகள், ஏரி, கிணறு, குளங்கள் முழுமையாக நிரம்பியது. அதேபோல் ஆரணி அடுத்த சைதாப்பேட்டை, முள்ளிபட்டு ஆகிய பகுதியில் உள்ள ஆனந்தபுரம் ஏரி நிரம்பி வி.ஏ.கே நகர், சைதாப்பேட்டை, தேனருவி நகர், ஜெயலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து செடி மற்றும் புற்கள் வளர்ந்து பயிர் போல் காணப்பட்டது.

மேலும், ஏரிகளில் இருந்து வெளியேறிய உபரி நீரால் வீட்டு மனைகளில் தேங்கியிருந்த தண்ணீரில் மீன் குஞ்சுகள் அடித்து வரப்பட்டு தண்ணீரில் வளர்ந்துள்ளது. அதில்,  வீட்டுமனை அமைக்கப்பட்டு இருந்த பகுதிகளில் இருந்த சிறு, சிறு பள்ளங்களில்  தேங்கிய தண்ணீரில் வளர்ந்திருந்த மீன்கள், தண்ணீர் வற்றியதால்,  துள்ளி குதித்து கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீன்களை  ஆர்வத்துடன் பிடித்து மகிழ்ச்சியாக வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

Related Stories: