ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவுபடி பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : ‘‘ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவுப்படி சித்தூர் மாநகராட்சி தற்காலிக தூய்மைப்பணியாளர்களை ஆந்திர அரசு உடனே நிரந்தரம் செய்யவேண்டும்’’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் வலியுறுத்தினர்.சித்தூரில் நேற்று ஏஐடியுசி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தூர் தர்கா சர்க்கிள் அருகே உள்ள அம்பேத்கர் உருவ சிலை  முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியூசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி தற்காலிக எலக்ட்ரிஷன், பிளம்பிங் மெக்கானிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் 10 ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான தற்காலிக ஊழியர்கள் பல ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள்.

இருப்பினும் மாநில அரசு தற்காலிக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.  இதனையடுத்து தற்காலிக ஊழியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘உடனடியாக தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கும்  மற்றும் தற்காலிக அனைத்து  துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு மாதம் ₹25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிபவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.

 ஆனால் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மாநில அரசு மதிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தற்காலிக அனைத்து துறையை சேர்ந்த பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதேபோல் ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மதித்து மாதம் ₹25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு ஜோடி சீருடைகள் வழங்க வேண்டும்.

முக கவசம், கிருமி நாசினி மருந்து, கையுறை, காலுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும். இ எஸ் ஐ பி எப் பிடித்தல் இருக்கவேண்டும் தற்காலிக ஊழியர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இதில் ஏஐடியுசி ஊழியர் சங்க நகர தலைவர் மணி, செயலாளர் கோபி, பொருளாளர் கிட்டு பாய் உள்பட ஏராளமான தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தற்காலிக அனைத்து துறையை சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: