புதிய அரசாணையை உடனடியாக ரத்து செய்து அரசு ஊழியர்களுக்கு பழைய சம்பளத்தை வழங்க வேண்டும்

* ஆந்திர முதல்வருக்கு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

*  தாமதப்படுத்தினால் தலைமைசெயலகம் முற்றுகை என எச்சரிக்கை

சித்தூர் : ‘‘புதிய அரசாணையை உடனடியாக ரத்து செய்து பழைய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தாமதப்படுத்தினால் தலைமைசெயலகம் முற்றுகையிடப்படும்’’ என்று அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளன. சித்தூரில் நேற்று ஜில்லா பரிஷத் அலுவலகம் முன்பு  பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏ.பி.என்.ஜி.ஓ. ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராகவுலு பேசியதாவது:-

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், தேர்தலின்போது ஆந்திர மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். பாத யாத்திரையின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்தார். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அனைவரும் ஜெகன்மோகன் கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்தார்கள்.

அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தற்போது 3 ஆண்டுகள் அவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதேபோல் கடந்த 9 ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து துறையை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

இதனால் அனைத்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனால் எங்கள் போராட்டங்கள் மீது மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இந்நிலையில் கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதாக நள்ளிரவில் அரசாணையை மாநில முதல்வர் ஜெகன்மோகன்  வெளியிட்டார். அந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பிட்மெண்ட் 23 சதவிகிதம் உயர்த்தியுள்ளார். இதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

அதேபோல் நகர்ப் புறங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எச்.ஆர். தொகை மிகவும் குறைத்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எச்.ஆர். உயர்த்தி உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அதேபோல் நிலுவையில் உள்ள ஏழு வருட டி.ஏ. பில் வழங்க அரசாணையில் உத்தரவு பிறப்பிக்கவில்லை. முதல்வர் ஜெகன்மோகன், அமைச்சர்களுடன் கலந்து பேசி அரசாணை வெளியிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த அரசாணையால் அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

பிட்மெண்ட் 23 சதவிகிதம் உயர்த்துவதற்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்க தலைவர்களுடன் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆலோசனை நடத்திய பின்னர் பிட்மெண்ட் சம்பள உயர்வு முடிவை அறிவித்திருக்க வேண்டும். அது போன்று செய்யாமல் அமைச்சர்களுடன் கலந்து பேசி நள்ளிரவில் அரசாணை வெளியிட்டு உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 ஆகவே, அரசு ஊழியர்களுக்கு அறிவித்த 23 சதவிகிதம் பிட்மெண்ட் ரத்து செய்து பழைய சம்பளத்தை, பழைய பிட்மெண்ட், பழைய எச்.ஆர்., நிலுவையில் உள்ள 7 வருட டி.ஏ. பில் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இந்த கோரிக்கைகளை ஆந்திர மாநில அனைத்து ஊழியர் சங்கம் சார்பில்  மாநிலம் முழுவதும் அரசு துறையில் பணிபுரியும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

 

எங்கள் கோரிக்கைகளை மாநில முதல்வர் ஜெகன்மோகன் உடனடியாக நிறைவேற்றாவிட்டால்  அடுத்த மாதம் ஏழாம் தேதி அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் ஜில்லா பரிஷத்  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரபாகர், ஏ.பி.சி.பி.எஸ். அரசு ஊழியர் சங்க தலைவர் பச்சார்லா சுதாகர், ஏ.பி.டி.எஃப். ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் நாதமுனி, ஏ.பி.எம்.எச். ஊழியர் சங்க நகர தலைவர் முரளி பாபு, ஏ.பி.பி.டி. ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஹைதர் பாஷா, சுகாதாரத் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவி சுனிதா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு துறையை சேர்ந்த அரசு ஊழியர், சங்க தலைவர்கள் துணை தலைவர்கள், பொருளாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: