அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்துதிருமலை தேவஸ்தான கட்டுப்பாட்டு பகுதிகளில் 2வது நாளாக உ.பி. மாநில போலீசார் ஆய்வு-பக்தர்களின் தரிசனம், உடமை பாதுகாப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம்

திருமலை : அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, திருமலை தேவஸ்தான கட்டுப்பாட்டு பகுதிகளில் 2-வது நாளாக உ.பி. மாநில போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, பக்தர்களின் தரிசனம், உடமை பாதுகாப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சர்வதேச அளவில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களுக்கு எந்தவித தள்ளுமுள்ளு மற்றும் இடர்பாடுகள் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பிரம்மோற்சவம் போன்ற முக்கிய உற்சவ நாட்களில் பல லட்சம் பக்தர்கள் வந்தாலும் எந்த ஒரு சிறிய அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் பக்தர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகள் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, உத்தரபிரதேச மாநில டி.ஜிபி தலைமையில் சிறப்பு குழுவினர் திருப்பதி வந்துள்ளனர். நேற்று முன்தினம் திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பல நாயுடு மற்றும் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் மற்றும் திருப்பதி-திருமலையில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு திருப்பதி போலீசார் விளக்கமளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, 2-வது நாளாக திருமலையில் முகாமிட்டுள்ள உத்தரப்பிரதேச மாநில போலீசார் ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு எவ்வாறு சோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களுக்கு எவ்வாறு வசதிகள் செய்து தரப்படுகிறது? அவர்களின் உடமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் எப்படி தரிசனம் செய்து வைக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து தேவஸ்தான கட்டுப்பாடு அறைகள் மற்றும் கோயில் வளாக பகுதிகளில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றனர்.

இதுதவிர, திருமலையில் பக்தகளின் பொருட்கள் காணாமல் போனால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? குழந்தைகள், பெரியவர்கள் காணாமல் போனால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? திருட்டு சம்பவத்தை எப்படி தடுக்கிறார்கள் என்பதை திருமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் வைத்து எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்து கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் கூறியதாவது:-தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய திருப்பதி-திருமலையில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக உத்தரபிரதேச மாநில போலீசார் வந்துள்ளனர். அவர்களுக்கு இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதேபோன்று ஏற்கனவே இமாச்சலப் பிரதேஷ், மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி ஆலய அதிகாரிகள், தெலங்கானாவில் யாதகிரி புவனகிரியில் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அந்தந்த மாநில அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மற்ற மாநிலத்திலும் இதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வையிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: