மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்எல்ஏக்களை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் சஸ்பெண்ட் செய்தது ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்எல்ஏக்களை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் சஸ்பெண்ட் செய்தது ரத்து என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை சபாநாயகர் அறையில் ஒழுங்கீனமாக நடந்ததாக 12 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து 12 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். எம்எல்ஏக்களை காலவரம்பின்றி இடைநீக்கம் செய்வது சட்டவிரோதம் எனவும் கூறியுள்ளது. ஒரு கூட்டத்தொடரில் இருந்து வேண்டுமானால் இடைநீக்கம் செய்யலாமே தவிர வரம்பின்றி நீக்க முடியாது என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றதின் இரண்டு நாள் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் விவரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் சகன் புஜ்பால் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரினர். ஆனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், அவையை நடத்திய பாஸ்கர் ஜாதவ் 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். இதனால் சபாநாயகரின் அறைக்குச் சென்ற பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் அறையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி பாஜக உறுப்பினர்கள் 12 பேரை ஓராண்டுக்கு அவை நடவடிக்கைகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் அனில் பரப் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சஞ்சய் குதே, ஆசிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல், பராக் அலாவ்னி, ஹரிஷ் பம்பாலே, யோகேஷ் சாகர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள். சஸ்பெண்ட் காலத்தில் 12 எம்.எல்.ஏ-க்களும் மும்பை மற்றும் நாக்பூர் சட்டமன்ற வளாகத்துக்கு வரக் கூடாது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், எஞ்சிய கூட்டத்தை பாஜக ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சி இது என குற்றம்சாட்டி இருந்தார்.

Related Stories: