ரயில்வே தேர்வு முறைகேட்டை கண்டித்து பீகாரில் மாணவர்கள் அமைப்பினர் சார்பில் முழு அடைப்புப் போராட்டம்

பாட்னா : ரயில்வே தேர்வு முறைகேட்டை கண்டித்து பீகாரில் மாணவர்கள் அமைப்பினர் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டிக்கெட் பரிசோதகர், தட்டச்சர் உள்ளிட்ட 35,000 பணியிடங்களுக்கு என்டிபிசி என்ற தேர்வை ரயில்வே தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்தியது. 60 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியது. அதில் 2ம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கூறப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ரயில்வே துறையை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய் கிழமை அன்று கயாவில் பயணிகள் ரயில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து தேர்வை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்தது. இந்த நிலையில் முதல் தேர்வின் அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி போராடி வரும் மாணவர் அமைப்பினர் சார்பில் பீகாரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் முழு அடைப்புப் போராட்டத்தை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வன்முறையை தூண்டிவிட்டதாக பாட்னாவைச் சேர்ந்த பயிற்சி மைய ஆசிரியர்கள் 6 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது குற்ற நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Related Stories: