அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான மருத்துவ படிப்புகளுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரக்கூடிய சூழலில் நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியலின் படி 719 மாணவர்கள் இன்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். 2 நாட்களில் மொத்தம் 2,135 பேர் விண்ணப்பித்திருந்தனர். முதற்கட்ட கலந்தாய்வு 9 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாலை வரை இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியலின் படி மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வில் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

உள் இடஒதுக்கீட்டின் படி மொத்தமாக 534 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 437 இடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கும், 97 இடங்கள் பி.டி.எஸ் படிப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 324 எம்.பி.பி.எஸ் இடங்களும், 13 பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளை பொறுத்தவரையில் 113 எம்.பி.பி.எஸ் இடங்களும், பல் மருத்துவத்திற்காக 84 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 534 இடங்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

Related Stories: