ஒரு மண்டலத்திற்கு 3 என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 45 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு: இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை குழுவில் உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்தது. அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி 200 வார்டுகளில் கண்காணிப்பு பணிகளை  மேற்கொள்ள உள்ள பறக்கும்படை குழுவினருக்கான வாகனங்களை கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் கூடுதல் ஆணையர் செந்தில்குமார், கூடுதல்  மாவட்ட தேர்தல் அதிகாரிகள், துணை ஆணையர்கள் விஷூ மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங்  காஹ்லோன், உதவி ஆணையர் பெர்மி வித்யா, மாநகர வருவாய் அதிகாரி சுகுமார்  சிட்டி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளிலும் பணம் ரொக்கமாகவோ அல்லது பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும், ஒரு மண்டலத்திற்கு மூன்று என சுழற்சி முறையில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக சாதாரண தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 26ம் தேதி மாலை 6.30 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ₹50,000க்கு மேல் அல்லது ₹10,000க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படையினர் என்ற அடிப்படையில் 45 பறக்கும் படை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து மண்டல அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இவ்வாறு ககன்தீப் சிங் பேடி கூறினார்.

Related Stories: