தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்; மதம் மாற்றும் முயற்சி நடக்கவில்லை: மாணவி பேசும் வீடியோ வைரல்

தஞ்சை:  தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில்  உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்2மாணவி பூச்சி  மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19ம்தேதி  இறந்தார்.  முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மாணவி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், மதம் மாற சொன்னதால் விஷம் குடித்ததாக கூறுவதுபோல் இருந்தது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். மதம் மாற்ற பிரச்னையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும் எனக்கோரி பல்வேறு அமைப்பு சார்பில் போராட்டமும் நடந்தது.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கில் தஞ்சை நீதிபதி முன்பு மாணவியின் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த 23ம்தேதி மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா  ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, மாணவி பேசுவது போல் வீடியோ எடுத்த அரியலூர் மாவட்ட விசுவ இந்து பரிஷத் உறுப்பினர் முத்துவேல் மற்றும் மாணவியின் பெற்றோர் தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி வீடியோ பதிவு செய்த செல்போனை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் மற்றொரு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பேசுவது போல் இருக்கும் அந்த வீடியோவில், தற்கொலைக்கான காரணம் மதமாற்றம் இல்லை என தெரிய வந்துள்ளது. படிப்பில் முதல் ரேங்க் எடுப்பதாக தெரிவிக்கும் அந்த மாணவி, விடுதி வார்டன் கொடுக்கும் வேலையால் படிப்பில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. விடுமுறைக்கு கூட வீட்டுக்கு செல்ல முடியாது. தொடர்ந்து விடுதி வார்டன் வேலைகள் கொடுத்து வந்தார். இதனால் விஷமருந்தியதாக தெரிவிக்கும் அந்த மாணவி, தான் விஷமருந்தியது யாருக்கும் தெரியாது. பள்ளியில் பொட்டு வைத்து கொள்ள கூடாது என யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். மாணவி தற்கொலை தொடர்பாக கடந்த சில நாட்களாக பரவி வந்த தகவல்கள் அனைத்தும் போலியானது என்பது போல் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் மதபிரசாரம் நடத்தப்படவில்லை; மாவட்டக்கல்வி அலுவலர் அறிக்கை: தஞ்சாவூர் கல்வி மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி இறப்பு தொடர்பாக மாவட்டக்கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை நேற்று மாலை வெளியானது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவி மார்ச் 2020ல் 10ம் வகுப்பில் 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்கு இல்லத்தில் தங்கி கல்வி பயின்றுள்ளார். ஜன.10ம்தேதி மாணவிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

ஜன.15ம் தேதி பள்ளிக்கு காவலர்கள் சென்று விசாரணை மேற்கொண்டபோது தான் பள்ளியில் அம்மாணவி தோட்டத்துக்கு வைத்துள்ள களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கியமேரி தெரிவித்தார். இப்பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போதெல்லாம் மாணவ, மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்த புகார்கள் ஏதும் வரவில்லை. கடந்த 10ஆண்டுகளில் 5,270 இந்து மாணவ, மாணவியர்களும், 2,290 கிறிஸ்தவ மாணவ, மாணவியர்களும், 179 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களும் கல்வி பயின்றுள்ளது தெரியவந்தது.

இந்த கல்வி ஆண்டில் 444 இந்து மாணவ, மாணவிகளும், 219 கிறிஸ்தவ மாணவ, மாணவிகளும், 405 இஸ்லாமிய மாணவ, மாணவிகளும் 6-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படித்து வருகின்றனர். கிறிஸ்தவ மேலாண்மை நிறுவனத்தினரால் இப்பள்ளி நடத்தப்பட்டாலும், அதிகளவில் இந்து மத மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். இப்பள்ளியில் மத ரீதியான பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்பட்டவில்லை என விசாரணை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: