பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது மனைவி அளித்த புகாரில் சிக்கினார்

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை, மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சேகர் (30).  பாரிமுனையில் ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அலுவலராக வேலை பார்த்து  வருகிறார். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 வயது மகன்  உள்ளார்.

சேகர், ஆபாச வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. மேலும், அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்கள் கவர்ச்சியாக இருந்தால்,  அவர்கள் குளிப்பது, உடை மாற்றுவது போன்றவற்றை ரகசியமாக செல்போனில்  வீடியோவாக பதிவு செய்து பார்த்து ரசிப்பதில் சேகருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், எதிர் வீட்டு பெண் ஒருவர் உடை மாற்றுவதை, மறைந்திருந்த பார்த்த சேகர், அதை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், அலறி கூச்சலிட்டதும் சேகர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். பின்னர், சேகரின் வீட்டுக்கு  வந்த அந்த பெண், அவரது கன்னத்தில் அறைந்துவிட்டு, செல்போனில் உள்ள தனது உடை மாற்றும் காட்சிகளை நீக்க  வேண்டும் என சத்தம் போட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, சேகரின் செல்போனை  அவரது மனைவி வாங்கி பார்த்ததில், அதுபோன்ற காட்சிகள் இல்லை. இதனால் எதிர்வீட்டு  பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

அவரது மனைவி, கடந்த 2  நாட்களுக்கு முன் அவரது செல்போனை சோதித்து பார்த்தபோது, அதில் எதிர்வீட்டு  பெண் உடை மாற்றுவது, தனது சகோதரி உடை மாற்றும் காட்சிகள் பதிவாகி  இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சேகரிடம் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரமான மனைவி, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில், தனது கணவன் மீது புகார் அளித்தார். அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி பெண்கள் வன்கொடுமை, மானபங்கப்படுத்துவது மற்றும்  தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 பிரிவுகளின் கீழ்  வழக்குபதிவு செய்து, சேகரை கைது செய்தார். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து, அதில் உள்ள ஆபாச வீடியோக்களை அழித்தனர். பின்னர் அவரை  சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: