தமிழகம் நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர திமுக ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாட்டிற்கு நம்பர் 1 இடம்  என்று சொல்லும் நிலை வர வேண்டும். எனவே அந்த எண்ணத்தோடுதான் இன்றைக்கு இந்த  ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக  செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி-நளினி ஆகியோரின்  மகள் தரணி -ச.ராகவேந்திர மூர்த்தி திருமணம் சென்னை  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு திமுக மகளிர் அணிச்  செயலாளர் கனிமொழி எம்பி,  மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா முன்னிலை வகித்தனர்.  திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை பொறுப்பு  ஏற்று மணவிழாவினை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகிற போது, “நம்முடைய முதல்வர் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார். கூட்டணியில் இருக்கும் தலைவர்களிடத்தில் கூட அதிகம் பேச மாட்டார்” என்றெல்லாம் சொன்னார். என்னை பொறுத்தவரை பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில் திறமையைக் காட்ட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். எனவே அதற்கு நீங்கள் எல்லாம் எந்த அளவிற்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இன்னும் நான் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டு சொல்லுகிற போது, அந்தந்த மாநிலத்தில் இருக்கும் முதல்வருக்கு எல்லாம் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்ட நேரத்தில், அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மு.க.ஸ்டாலின் முதலிடம் என்ற செய்தி. அதில் எனக்கு ஒரு பெருமைதான், சிறப்பு தான், அதை நான் மறுக்கவில்லை. முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாட்டிற்கு நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். எனவே அந்த எண்ணத்தோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் இந்த சூழ்நிலையில்,  டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த திருமண நிகழ்ச்சியைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த திருமண நிகழ்ச்சியை நடத்துகிற நேரத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி நடைபெறுகிற தேர்தலில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட வேண்டிய நிலையில் தேர்தலை நடத்துகிறோம். அது தேர்தலில் மட்டுமல்ல, அது குடும்பத்திலும், இங்கு மணவிழா காணும் மணமக்களும் வாழ்க்கையில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு நிச்சயமாக இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அதில் இருக்க வேண்டுமென்று மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” நீங்கள் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி டி.கே.எஸ்.இளங்கோவனின் தொண்டு மேலும் இயக்கத்திற்கு வலு சேர்க்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி,   க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச்  செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  உள்ளிட்ட  தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: