தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பதா? ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி: ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக் கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப்பாடலாக கடந்த டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் பலர் எழுந்து நிற்கவேண்டிய குறைந்தபட்ச அவை நாகரிகத்தைக் கடைப்பிடிக்காதது மட்டுமல்ல, எழ முயற்சித்தவர்களையும் இழுத்து அழுத்தி உட்காரச் சொன்னதும், இதுபற்றி செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டதற்கு மேலும் ஆணவத்தோடும், அறியாமையோடும், ‘’தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவேண்டியதில்லை என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது’’ என்று பதில் கூறியது மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டியதும், தண்டிக்கப்படக் கூடிய அவமரியாதைச் செயலுமாகும்.

உயர்நீதிமன்ற தீர்ப்புப்பற்றி ஆணவக் குரலில் பதில் கூறிய அந்த ‘மேதாவிலாசங்களுக்கு’ அதன் பிறகு ‘’தமிழ்த்தாய் வாழ்த்து மாநில அரசின் பாடல்’’ என்றும், அத்துடன் ‘’அது பாடப்படும்போது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும்’’ என்றும் தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணை பற்றித் தெரியாமல் போனது எப்படி?. இவர்கள்மீது உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கத் தயங்கக் கூடாது. தண்டனைக்குரியதே தவிர -மன்னிப்பதற்கு உரியது அல்ல.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது மற்றவர்கள் எழுந்து நிற்கும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மட்டும் எழுந்து நிற்காதது அடாவடி தனமானது, வன்மையாக கண்டிக்கதக்கது. ஒன்றிய அரசு நிறுவனமாக இருந்தாலும் மாநிலத்திற்குள் இருக்கும் போது மாநிலத்திற்கு உட்பட்டு தான் முடியும். அதை பற்றியெல்லாம் கண்டு கொள்ளலாம் இருக்க முடியுமா? இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன்: குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்.

கவிஞர் வைரமுத்து: தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டமன்று; அறம். தமிழ்த்தாய் வாழ்த்தும் அப்படியே. சட்டப்படியும் எழுந்து நிற்கலாம்; அறத்தின்படியும் எழுந்து நிற்கலாம். இரண்டையும் மறுத்தால் எப்படி? தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?.

இதே போல ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு இந்திய தேசிய லீக்  மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு இளைஞர் சங்கம் மாநில தலைவர் எம்.ஆர்.மதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: