ஆக்கிரமிப்போ, பதிவு செய்யவோ கூடாது நீர்நிலைகளில் அனுமதி வழங்கும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள இடங்களை பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் பதிவு செய்யக்கூடாது என்றும் அப்படி பதிவு  செய்யும் அதிகாரிகள் மீதும் கட்டிட அனுமதி தரும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல்  நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளை  ஆக்கிரமித்து குடியிருப்புகள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள்  கட்டப்பட்டுள்ளதை எதிர்த்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை  ஐகோர்ட்டில் 50க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. உயர் நீதிமன்றமும்  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் பல்வேறு  உத்தரவுகளை பிறப்பித்து வந்தது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக அரசு  பல்வேறு நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தது.இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,  நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019 ஜனவரி மாதமே தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீர்நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை காண தமிழ்நிலம் என்ற இணையதளத்தில், அனைத்து நீர்நிலைகளின் விவரங்களும் தாலுகா வாரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47,707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 4862 அரசு கட்டிடங்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளது. நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாத கால அவகாசம் தேவைப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி அகற்றப்பட்டு வருகிறது. அனைத்து நீர்நிலைகளையும் அந்த சட்டத்தின்கீழ் கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வடிவு வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. வருவாய் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் 313 தாலுகாக்கள் உள்ளன. தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகள் குறித்த விவரங்கள் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் இறுதி தீர்ப்பளித்தனர். அதில், ‘‘நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலங்களை பத்திரப்பதிவு துறை பதிவு செய்யக்கூடாது. இனிமேல் எந்த நீர்நிலையிலும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. நீர்நிலைகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி, மின் இணைப்பு அனுமதி,  குடிநீர் இணைப்பு அனுமதி வழங்க கூடாது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் வரி ஆகியவற்றை வசூலிக்க  கூடாது. அந்த நிலங்கள் நீர்நிலை பகுதி என அறிவித்து அதை, தமிழக அரசின் ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நீர்நிலைகளில்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்படும் இடத்திற்கு திட்ட அனுமதி  வழங்குவது, அந்த நிலங்களை பதிவு செய்வது, சொத்து வரி விதிப்பது, மின்  கட்டணம் வசூலிப்பது, குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது. மீறி செயல்படும்  அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திட்ட அனுமதி, பதிவு ஆகியவற்றை  மேற்கொள்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடம்,  நீர்நிலை பகுதி அல்ல என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்.  நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வில் தெரிய வந்தால்  உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மேல்  நீர்நிலை பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் இருக்க கூடாது” என்று  கூறியுள்ளனர்.

Related Stories: