நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரண தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26ம் தேதி (நேற்று முன்தினம்) அறிவித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 28ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் (உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 29ம் தேதி (நாளை) சனிக்கிழமை பணி நாள் என்பதால், அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கடந்த 19ம் தேதி நடந்த கூட்டத்தில், கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை  ஏற்று வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவினை நடத்திடவும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த ஆணை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 தொற்று உள்ளவர்கள் மட்டும் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: