ரேஷன் கடைகள் மூலம் முதல்கட்டமாக சென்னை, கோவையில் சிறு தானியங்கள் விற்பனை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னை, கோவை மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர பொங்கல் பண்டிகை காலத்திலும் சிறப்பு பொருட்கள் வழங்கப்படுகிறன. தற்போது கூட மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் நசிமுதீன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து சிறு தானியங்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும். ராகி, கம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும். இவை 500 கிராம் முதல் ஒரு கிலோ வரையிலான பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த சிறு தானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் மாநில அளவிலான குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக கூட்டுறவு சங்க பதிவாளர் செயல்படுவார். வேளாண் துறை இயக்குனர் உட்பட 5 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன் பின்னர் மற்ற மாவட்ட ரேஷன் கடைகளிலும் சிறு தானியங்கள் விற்பனை செய்யப்படும். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இது தொடர்பான விளம்பரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: