நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய முடிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

 திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதிமாறன் எம்பி, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது.

கூட்டத்தில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது. யார், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதை, போல வர உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை பெற வேண்டும். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் மக்களுக்கு செய்துள்ள மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் கட்சியினருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: