தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான 50% ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 30% ஒதுக்கீடு வழங்கிய தனி நீதிபதி உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

சென்னை: கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, எம் டி, எம்.எஸ் போன்ற  மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடும், 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று  2021ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் மருத்துவர் பார்க்கவியான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,   முதுநிலை மருத்துவப் படிப்பில் 1968 இடங்கள் உள்ளன.  இதில் 50 சதவீதம்  அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள 969 இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  ஊக்க மதிப்பெண்  வழங்குவதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில்  படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது. அதனால், இட ஒதுக்கீடு அல்லது ஊக்க மதிப்பெண் ஆகிய இரண்டில்  ஏதாவது ஒரு சலுகையை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஊக்க மதிப்பெண்ணை தகுதியாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள், கிராமப்புறங்களில் , மலைப்பகுதி அணுக முடியாத பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிவதால் ஏழை பொதுமக்கள் தான் பயன்பெறுகிறார்கள் என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம். தண்டபாணி, கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இரண்டு சலுகைகளும் வழங்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பொதுப் பிரிவிலும் அவர்கள் பங்கேற்க தடை இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் பார்க்கவியான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அரசு மருத்துவர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவில் வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் போட்டியிட உரிமை உள்ளது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்குக்கான 50 சதவீத ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்கள், 30 சதவீதம்  வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கலந்து கொள்ளலாம்  என்று அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவு  உறுதி செய்யப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண்கள் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: