ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு: இசிஆரில் மறியல்

துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம்  பெத்தேல் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புகள் உள்ள பகுதி நீர்நிலை என, ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற கடந்த 2 நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதையடுத்து, நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மக்கள் பெத்தேல் நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெத்தேல் நகரில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு,  சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் அங்கு வந்து, சிறிய அளவிலான கட்டிடங்களை இடித்தும், காலியாக உள்ள இடங்களை கைப்பற்றியும் அரசுக்கு சொந்தமான நிலம் என பெயர் பலகை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்,  தங்களுக்கு தீர்வு கிடைக்காமல் இங்குள்ள வீடுகளை அகற்ற கூடாது எனக்கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார்  முயற்சி செய்தனர். இதனால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களை சமாதனபடுத்தி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் ராஜிவ்காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.  இதனையடுத்து, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள்,  மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள்,   ‘‘30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கலைந்து செல்ல மாட்டோம்’’ என கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பிறகாக   நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: