மது பாட்டில்களை பதுக்கி விற்ற பெண் காவலரின் கணவர் கைது

ஆவடி:  குடியரசு தினத்தன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை பயன்படுத்தி ஆவடி, காமராஜ் நகர், 3வது தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில், மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாக, சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது, பாரில் 2 ஊழியர்கள் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது.  இதையடுத்து போலீசார் அங்கு நுழைந்து சோதனை நடத்தியபோது, 30 அட்டை பெட்டிகளில் 1,282 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்த 2 பேரை பிடித்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், எழும்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சிக்கந்தர் (33), கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், குரு வினாயக பள்ளியை சேர்ந்த பெருமாள் (43) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், சிக்கந்தர் மனைவி ஜெகமத்பானு, அண்ணா சாலையில் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: