வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணியில் கட்சிகள்; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி; கூட்டணியை முடிவு செய்வதில் அதிமுகவில் குழப்பம் நீடிப்பு: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7 முனை போட்டி நிலவும் நிலையில்  வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளன. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் எதிர்கட்சியான  அதிமுகவில் கூட்டணியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி 31ம் தேதிக்குள் நடத்தி  முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில்  உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490  பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக  ஈடுபட்டு வந்தது. தேர்தலை நடத்துவது குறித்து அனைத்து கட்சி  பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டது.

 

அப்போது  ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி  பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், தமிழகத்தில்  பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி,  21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர்  பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு  உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621  வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838  பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள்  தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மாநகராட்சி மன்ற உறுப்பினர்,  நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்  ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில்  நடைபெற உள்ளது. மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகளில்  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும்  5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் 1,37,06,793 ஆண் வாக்காளர்களும், 1,42,45,637 பெண்  வாக்காளர்களும், 4.324 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம்  2,79,56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் தேதி நேற்று  அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு  வந்தது. இம்முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் கூட்டணி,  அதிமுக மற்றும் கூட்டணி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக  ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும்  பணியை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, திமுக அந்தந்த மாவட்ட செயலாளர்கள்  தலைமையில் குழு அமைத்து வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை  மேற்கொண்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜ ஆகிய கட்சிகளுக்கு  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்துவிட்டது. இதேபோல்,  தேர்தலில் அதிகமாக இடங்களை கேட்டு பாஜவும் அதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்து  வருகிறது. கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக குறித்து தரம் தாழ்ந்த  விமர்சனங்களை தமிழக பாஜவின் முக்கிய தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். இதனால்,  அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரையில் பாஜவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட பாஜவுடனான கூட்டணி  தான் படுதோல்விக்கு காரணம். எனவே, இத்தேர்தலில் பாஜவுடனான கூட்டணியை  முறித்துவிட்டு ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே  சிறந்தது என அதிமுக தலைமைக்கு அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களும்  நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், அதிமுக தலைமை என்ன செய்வதென்று  தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து போய் உள்ளது.

 இது ஒருபுறம் இருக்க,  எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இரட்டை தலைமையில் அதிமுக இயங்குவதால் பல  மாவட்டங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் இழுபறி நீடித்து வருகிறது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதிமுகவில் நிலவி வரும்  குழப்பமான சூழ்நிலை கட்சியின் தலைமைக்கு மேலும் நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி  நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று காலை  10 மணிக்கு தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 4ம் தேதி வரையில் வேட்பு  மனுக்கள் பெறப்படும். பிப்ரவரி 5ம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு  செய்யப்படும். பிப்ரவரி 7ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.

இதை தொடர்ந்து,  19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6  மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் எண்ணும் பணி  பிப்ரவரி 22ம் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கும். இதையடுத்து,  பிப்ரவரி 24ம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெற்று வெற்றி பெற்ற  வேட்பாளர்கள் மார்ச் 2ம் தேதி பதவி ஏற்பார்கள்.

தேர்தல் ஆணையர் ஆலோசனை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில்  மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனையில்  ஈடுபட்டார். முதல்கட்டமாக 18 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்வது, முன்னேற்பாடுகள், வேட்பாளர்களின் பரப்புரை விதிமுறைகள், கொரோனா பரவலை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை  வழங்குவது, கட்சி சுவரொட்டி விளம்பரங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்டவைகள்  குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள்.  80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: