குடியரசு தினத்தில் பணி 106 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விதிகளை மீறி அரசு விடுமுறை நாளில் செயல்பட்ட 106 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வர், தொழிலாளர் உதவி ஆய்வர்களுக்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இருந்தால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய விடுமுறை நாளான நேற்று முன்தினம் குடியரசு தினத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் 64, உணவு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் 36, மோட்டார் போக்குவரத்து சட்டத்தின்கீழ் 6 என மொத்தம் 106 நிறுவனங்கள் செயல்பட்டதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: